இந்திய சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு சம்பவம்

எந்த நோக்கத்திற்காக ஒரு நீண்டகால அடையாளம் நொறுக்கப்பட்டதோ, அது நிறைவேற்றப்படாமலேயே, அதை நொறுக்கிய ‘நோக்கம்’ கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய இனவாத கலவரங்களுக்கும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் அந்த சம்பவம்தான் முக்கியக் காரணமாக அமைந்தது.
1528ஆம் ஆண்டு பாபரின் படைத்தளபதி மிர் பாகியால் கட்டப்பட்ட பாபர் மசூதி, கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் பாதுகாப்பாக இருந்தது. முதன்முதலாக 1853ஆம் ஆண்டு ராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற ஆதாரமற்ற தகவலை முன்னிறுத்தியே சர்ச்சை கிளம்பத் தொடங்கியது.
சுதந்திரத்திற்குப் பின்னர் 1949ஆம் ஆண்டு பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டபோது, அது இஸ்லாமியர்களின் உணர்வைப் பாதிக்கும் செயலாக பார்க்கப்பட்டது. காலம் நகர நகர ஒருசில அமைப்புகள் பாபர் மசூதி அமைந்துள்ள இடத்திற்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கின.
1989ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷித் என்ற இந்துத்துவ அமைப்பின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பாபர் மசூதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதே ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்’ என்பதையே பாஜக தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டு வெற்றியும் கண்டது. 1990ஆம் ஆண்டு பாஜக தலைவர் ஏ.கே.அத்வானி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை முழக்கமாகக் கொண்டு ரத யாத்திரை ஒன்றை நடத்தினார். அதன் பிரதிபலனாக உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து கரசேவகர்கள் என அழைக்கப்படும் இந்து அமைப்பினர்களை ஒன்றிணைத்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் எல்.கே.அத்வானி தலைமையில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. நாட்டின் மதநல்லிணக்கம் குறித்த மிகப்பெரிய விவாதங்களை உருவாக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி லிப்ரான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மசூதியை இடித்துக் கொண்டிருந்தவர்களிடம், ‘அங்கிருந்து கீழிறங்குங்கள்’ என சுரத்தற்ற குரலில் கூறியதாகவும், ‘உண்மையில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்குவது மட்டுமே அவர்களது உண்மை நோக்கமாக இருந்தது’ எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடெங்கும் உள்ள பல பகுதிகளில் நடைபெற்ற இந்து-முஸ்லீம் கலவரங்களில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். பல கோடி மதிப்பிலான பொருட்களும், பொதுமக்களின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டன.
இந்த வழக்கின் குற்றவாளிகளை ரேபரேலி நீதிமன்றம் ‘குற்றமற்றவர்கள்’ எனக்கூறி விடுவித்திருந்தாலும், ’கால தாமதம்’ உள்ளிட்ட காரணங்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறிய உச்சநீதிமன்றம், வழக்கை லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும், வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிப்பதற்காக, தினந்தோறும் விசாரணை நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று(டிச. 5) உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இந்த சம்பவமும், அதன் தாக்கங்களும் நீங்காத துயரங்களை ஒருபுறம் ஏற்படுத்தியிருக்க, மீண்டும் ‘ராமர் கோவிலைக் கட்டி முடிப்போம்’ என்ற வாக்குறுதியோடு 2017 உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது பாஜக. அதில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது.
அவர் முதல்வராக பதவியேற்ற பின் மாநிலத்தின் அறிவிக்கப்படாத நிறமாக ‘காவி’ அறிமுகம் செய்யப்பட்டது. இனவாதத்தையும், இந்துத்துவத்தையும் கொஞ்சம் தூக்கலாக முன்னிறுத்தியே செயல்பட்டு வருகின்றனர் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள். உலக மக்களுக்கு இந்தியாவின் முகவரியாகக் கருதப்படும் தாஜ்மகாலைக் கேள்விக் குறியாக்கினர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் ராமர் கோவில் கட்டுவதற்காக செங்கல்கள் வந்திறங்கியதாகவும், அதனைக் கண்காணிப்பு அதிகாரி கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இப்படி எப்போதுமே பரபரப்பாக இருந்த உ.பி.யில் உள்ளாட்சித்தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 14-ல் பாஜக அமோக வெற்றிபெற்றதாக மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், வாக்கு வங்கியில் மூன்றில் ஒரு பங்கைக்கூட பாஜக கைப்பற்றவில்லை என்பது பாஜகவினரே அறிந்த கசப்பான உண்மை.
அதிலும், குறிப்பாக ராமர் கோவில் கட்டப்போவதாக பாஜக சொல்லிக் கொண்டிருக்கும் அயோத்தி தொகுதியில், அவர்களின் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. பாஜக சார்பில் போட்டியிட்ட ரிஷிகேஷ் உபத்யாய், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் திருநங்கை குல்சன் சந்துவை வெறும் 3,601 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார் என்பது கவனிக்கத்தக்கது.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் வெறும் 27 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் சுயேட்சைகள் தலா 18 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்வாதி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 75,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற பாஜக மேயர், பெரும்பான்மை இல்லாத சூழலில்தான் பதவிவகிக்கப் போகிறார் என்பது மறுக்கமுடியாதது.
ஆனாலும், பாஜகவினர் இந்த மூன்றாம் தர வெற்றியைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். பாஜக-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உபி. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ராமர் கோவில் அலைகளையே பிரதிபலிக்கின்றன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சூறாவளிக்காகக் காத்திருங்கள்’ என பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவில் வெற்றி தோல்விகளைக் குறிப்பிடாமல் விட்டிருப்பதைக் கவனிக்க மூன்றாம் கண் தேவையில்லை. உண்மையில் பாஜக நாளுக்கு நாள் பலவீனமடைந்து கொண்டே வருகிறது. இனவாத, இந்துத்துவ முகத்தால் வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற அவர்களின் நோக்கம், அவர்களைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டே இருக்கிறது.
– ச.ப.மதிவாணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *