அரசு மெஷினே செயல்படாத போது ‘விஷன்’ எதற்கு இந்த அரசுக்கு? – டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு முதல்முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார் டிடிவி தினகரன். சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
‘தமிழக அரசு ‘விஷன் 2023’ என்ற திட்டத்தை அறிவித்து, தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுவதாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தின் உரை அதைப் பிரதிபலிப்பதாக இல்லை. அரசு இயந்திரமே செயல்படாதபோது, இந்த அரசுக்கு விஷன் ஒரு கேடா?’ என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தினால் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கூடன்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி பேசியிருக்க வேண்டும். உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு, கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இருக்கும் உலைகள் 40 முறைக்கு மேல் பழுதடைந்துள்ளன. வெறும் 2 உலைகளுக்கே இந்த பிரச்சனை என்றால், தரமற்ற பாகங்களை வைத்துக்கொண்டு 3, 4, 5 என உலைகளை செயல்படுத்துவது அந்தப்பகுதி மக்களுக்கு அரசு ஏற்படுத்தும் மிகப்பெரிய பாதிப்புதானே. அதேபோல, ஒகி புயலால் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கின்றனர். ஆனால், அதை தேசிய பேரிடராக அறிவிக்கும் எண்ணமே இந்த அரசுக்கு இல்லை. பெண்களுக்கான நல உதவிகளில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை என்பதையே ஆளுநரின் உரை உணர்த்துகிறது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *