ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கும் முதல் நாளான இன்று அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், சுயேச்சை வேட்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கலைக்கோட்டுதயம் 29-ந் தேதி மனு தாக்கல் செய்கிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுகவில் யார் வேட்பாளர் என இன்று அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய அடுத்த மாதம் 4ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதற்கிடையே, வேட்புமனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்ய வருவோர் கார்களில் அணிவகுத்து வரக்கூடாது என்றும், 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வர வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். இதனிடையே டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட கடிதத்தில், வரும் ஒன்றாம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *