கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத போலீசார்: சாலை மறியலுக்குப் பின் பெண் கைது!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.சந்திராபுரம் பகுதியில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை போலீசாருக்கு புகார் தெரிவித்தும் அப்பெண் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

கஞ்சா விற்கும் பெண் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திராபுரம் கிராம மக்கள், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள ஊஞ்சவேலாம்பட்டியில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ‘கஞ்சா விற்பனை நடைபெறுவதால் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்ளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், மக்கள் நிம்மதியிழந்துள்ளோம். இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி நகர போலீசார், அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

அதன் பின்னர், நேற்று இரவு சந்திராபுரம் பகுதியில், கஞ்சா விற்ற மகாலட்சுமி என்ற பெண்ணை கைது செய்த பொள்ளாச்சி தாலுகா போலீசார், அவரிடமிருந்து, ஒரு கிலோ, 170 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

– சிவசுப்பிரமணியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *