கைவிட்ட தமிழக அரசு – கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள்!

மீன்பிடிக்கச் சென்ற தங்களின் உறவினர்கள், ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடலை அடையாளம் கண்டு, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்; அதற்கான டிஎன்ஏ பரிசோதனையை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த ஜீடு (43), அவரது மகன் பாரத் (19), ரவீந்திரன்(50), ஜோசப் (70), கினிஸ்டன் (45), ஜேகன் (40) ஆகிய 6 பேரும் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒக்கி புயலில் சிக்கினர். இதில் ஜேகன் தவிர அனைவரும் இறந்துள்ளனர்.

ஜேகன் உயிர்பிழைத்து திருவனந்தனபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் அறிந்தவுடன் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும், உறவினர்களும், திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 2-ஆம் தேதி சென்றனர். அங்கு உயிர் இழந்தவர்களை பார்த்துள்ளனர். எனினும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அங்கேயே தங்கிய அவர்கள், திருவனந்தபுரத்தில் தங்கும் வசதியும், உணவும் கிடைக்காமல் அலைக்கழிப்புக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகினர். தமிழக அரசோ, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், 3 நாட்களாக சாலையோரம் தங்கி அவதிப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழுவின் கவனத்திற்கு தெரிய வரவே, அவர்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு, தூத்துக்குடி மீனவர்களின் நிலை குறித்து தெரிவித்து, இப்பிரச்சனையில் தலையிட்டு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் உடனடியாக கேரள மாநிலத் தலைவர்களைத் தொடர்பு கொண்டு, தூத்துக்குடி மீனவர்களின் நிலை குறித்துப் பேசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டக்குழுவால் நடத்தப்பட்டு வரும் ஈ.கே. நாயனார் சேவை விடுதியில் தங்கவும், அங்கேயே அவர்களுக்கு உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தனர்.

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன், சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர். ரசல், மாநகரச் செயலாளர் தா. ராஜா, இந்திய மாணவர் சங்க மாநகர ஒருங்கிணைப்பாளர் ஜாய்சன் ஆகியோரும் திருவனந்தபுரம் சென்றடைந்தனர்.

அவர்கள் தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜேகனை நேரில் சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.

பின்னர், நேற்று காலை மீனவர்களின் குடும்பத்தினர், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்தனர். திருவனந்தபுரத்தில் நடந்த இந்த சந்திப்பில் “மீனவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில், டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும், அதனடிப்படையில் உடல்களை அடையாளம் கண்டு, விரைந்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்; உடல்களை தூத்துக்குடிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகன ஏற்பாடு செய்துதர வேண்டும்” என்று மீனவர்களின் குடும்பங்கள் பினராயி விஜயனிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்த கேரள முதல்வர், தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தற்போது, மீனவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுடைய மரபணு, திருவனந்தபுரம் ராஜீவ்காந்தி தடயவியல் மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் 2 நாட்களில் தெரிய வரும் என்று கூறப்படும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள், மீனவர்களின் உறவினர்களுடன் திருவனந்தபுரத்திலேயே தங்கி, மீனவர்களின் உடல்களை தூத்துக்குடி கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *