கொந்தளித்து சாலைக்கு வந்த மக்கள்.. ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க வரும் முதல்வர்!

கஜாவின் கோரதாண்டவம் விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. கடைசிவரை முன் எச்சரிக்கை கொடுத்த தமிழக அரசு மீட்புப்பணிக்கு தயாராக இல்லை. கிராமத்து இளைஞர்களே தங்கள் கிராமங்களை தாங்களே மீட்டுக் கொண்டனர். 4 நாட்கள் ஆன பிறகும் மீட்புக்குழுக்கள் கிராமங்களுக்குள் செல்லாத விரக்தியும் தமிழக அரசு கொடுத்த புள்ளிவிபரங்களும் மக்களை கொந்தளிக்க வைத்து சாலை மறியலுக்கு அனுப்பியது.

தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம், பேராவூரணி தொகுதி காட்டாத்தி உள்ளிட்ட பல கிராமங்களில் மக்கள் சாலைக்கு வந்து போராடியும் யாரும் திரும்பிக்கூட பார்க்காத நிலையில் சாலையிலேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து போராடிய மக்கள் இரவில் அதிகாரிகள் வந்ததை பார்த்து பாதிப்புகளை இரவில் தான் பார்க்க நேரம் கிடைத்ததா என்று வாக்குவாதம் செய்த நிலையில் 5 அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட போலிசார் கிராமத்திற்குள் நுநை்து தடியடி நடத்தி 64 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர். இந்த கைது நடடிக்கையால் மற்ற கிராமங்களும் கொந்தளித்து நிற்கிறது.

இதனால் மறு போராட்டத்திற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்டவர்கள் ஏனே ஆலங்குடி தொகுதிப்பக்கம் பெரும் பாதிப்பு உள்ள வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிகளுக்கு செல்ல மனமில்லாமல் நகரப்பகுதிகளை சுற்றி வருவதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இப்படி அமைச்சர்கள் ஆளுங்கட்சி மீது மக்கள் கோபமாக இருப்பதால் முதல்வர் எடப்பாடியும் கிராமங்களுக்கு செல்லாமல் ஹெலிக்காப்டரில் சுற்றிப்பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. அறந்தாங்கி நகரம் வரை சென்ற அமைச்சர் கருப்பண்ணன் அங்கேயே பிரஸ் மீட் கொடுத்தார். அரசும் அதிகாரிகளும் கிராமங்களை புறக்கணிப்பதால் நாளுக்கு நாள் இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமாகவே உள்ளனர்.

 

News Source: https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/edapadi-palanisamy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *