சர்கார் பற்றி பேச முடிகிறது.. ராஜலட்சுமி பற்றி பேச நேரமில்லை.. அதிமுகவை தாக்கிய ஜிக்னேஷ் மேவானி

அதிமுகவை தாக்கிய ஜிக்னேஷ் மேவானி

கோவை: சர்கார் படத்திற்கு எதிராக போராடிய அரசுக்கு சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேச நேரம் இல்லையா என்று குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்த மாணவி அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியை சேர்ந்த தினேஷ் குமார் என்பவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த விழாவில் அவருக்கு சமூக நீதிக்கட்சி சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சேலம் மாணவி ராஜலட்சுமி குறித்து பேசினார்.

தமிழ்நாடு பெரியார் மண் அவர் தனது பேட்டியில், இந்த தமிழகம் பெரியார் மண். இதை பாஜக மத வெறி கொண்ட மாநிலமாக மாற்ற பார்க்கிறது. அதனால் இங்கே தற்போது சாதிய கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பட்டியலின ஜாதியினருக்கு எதிராக வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது.

ராஜலட்சுமி மரணம் சேலம் சிறுமி ராஜலட்சுமி கொடுமையாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஜாதி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விலங்குகள் இறந்தால், மாடு, நாய் இறந்தால் டிவிட் செய்யும் மோடி இதை பற்றி வாயை திறக்கவில்லை. தமிழக அரசு தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

தமிழக அரசு என்ன செய்கிறது அதையெல்லாம் செய்யாமல் தமிழக அரசு சர்கார் குறித்து பேசி வருகிறது. சர்காருக்கு எதிராக போராடிய கட்சியினர், ராஜலட்சுமி குறித்து பேச மறுக்கிறார்கள். தமிழக அரசே மோடி ஆலோசனையின் பெயரில்தான் இயங்கி வருகிறது. பாஜக தலைவர் அமித் ஷாதான் தமிழக அரசை கட்டுப்படுத்துகிறார்.

பெரிய கூட்டம் நடக்கும் சேலம் மாணவிக்காக நான் குரல் கொடுப்பேன். இந்தியா முழுக்க இதை தெரியப்படுத்துவேன். தமிழகத்தில் தலித் மக்களும் பெண்களும் படும் கஷ்டம் பற்றி இந்தியா முழுக்க பேசுவேன். இந்தியாவின் முக்கிய 20 தலைவர்களை அழைத்து பேச இருக்கிறேன். இதற்காக பெரிய கருத்தரங்கை நடத்துவேன் என்று ஜிக்னேஷ் மேவானி பேசியுள்ளார்.

News Source: https://tamil.oneindia.com/news/coimbatore/jinesh-mevani-raises-his-voice-on-salem-student-rajalakshmi-murder/articlecontent-pf336206-334018.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *