டிடிவி தினகரன் வெற்றி எதிரொலி – கொங்கு மண்டல அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட ஒரு மடங்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிமுகவின் பலம் வாயந்த பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சி அம்மாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்துவருகிறது. முன்பு பன்னீர்செல்வம் இது அம்மாவின் ஆட்சியில்லை என கூறினார். பின்னர் இரண்டு அணிகளும் இணைந்த பிறகு பதவிகளுக்காக இருவரும் இணக்கமாக போய்விட்டார்கள். ஆனால் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரையும் ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் தான் உள்ளார்கள் என்பதை இன்றைய தேர்தல் முடிவு தெளிவாக காட்டியுள்ளது.

குறிப்பாக இந்த அரசை வலிமையோடு கொண்டு செல்லும், மேற்கு மாவட்டமான சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் நீலகிரி என ஏழு மாவட்டத்தில் சுமார் 40 எம்எல்ஏக்கள் உள்ளார்கள். இந்த ஆட்சியை தாங்கி பிடித்ததும் இவர்கள் தான். இந்தநிலையில், இதுதொடர்பாக நாம் அதிமுகவினர் பலரிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது,

இன்றைய தேர்தல் முடிவு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த கட்சியை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இழந்துவிட்டது என்கிறார்கள்.

தொடர்ந்து இவர்கள் செய்யும் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இவர்களுக்காக மட்டுமே நடைபெறவதாக தெரிகிறது என கொங்கு மண்டல அதிமுகவில் பேசுகிறார்கள். இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ-வுமான தோப்பு வெங்கடாசலத்திடத்திடம் நாம்பேசிய போது அவர், ’அமைச்சர்களை மட்டும் வைத்து ஆட்சி அதிகாரத்தை நடத்திவிடலாம் என கணக்குப்போட்டால் அது தவறு என தேர்தல் முடிவு காட்டியுள்ளது’ என்றார்.

– ஜீவாதங்கவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *