
சென்னை: தனிக்கட்சி தொடங்குவது குறித்து எம்ஜிஆர் பிறந்ததினமான நாளை அறிவிப்பேன் என ஆர்.கே நகர் எம்எல்ஏ டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறி உள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் தேதி, தமது அடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து அறிவிப்பேன் என்று கூறிய அவர், தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் நாளை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. அது எப்போது முடியும் என்று தெரியாது. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், தனிக்கட்சி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது என்றார். மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களின் அணி பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெறும் எனவும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுகவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் தங்களின் பின்னால் உள்ளதாகவும், நாளை அறிவிக்கப்போகும் முக்கிய முடிவு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் விவாதித்து விட்டதாகவும் தினகரன் தெரிவித்தார்.