தமிழகத்திலும் பீஹார் நிலைமை தானா?..வேதாரண்யத்தில் 2.5 கி.மீ சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள்!

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி இல்லாததால் உறவினர்களே தூக்கிச் சென்ற சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டுள்ளார். வேதாரண்யம் நகரப்பகுதிக்குட்பட்ட மணியன் தீவு கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது நடராஜன், இவர் நேற்று முன்தினம் சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு முடிந்து உறவினர்களிடம் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாத நிலையில் வெளியில் இருந்தும் வாகனம் வர தாமதமாகியுள்ளது.
மக்களிடையே பரபரப்பு
இதனால் சடலம் இருந்த ஸ்டெர்ச்சரோடு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு உறவினர்கள் உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்றுள்ளனர். நகர வீதிகள் வழியே சடலம் எடுத்துச் செல்லப்பட்டதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் அதிருப்தி வேதாரண்யத்திற்குட்பட்ட 5 காவல்நிலைய சரகங்களில் நேரிடும் உயிரிழப்புகளுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தான் உடற்கூறு ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால் இங்குள்ள தாலுகா தலைமை மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாதது மக்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
விளக்கம் கேட்டுள்ள ஆட்சியர்
எனவே உடனடியாக அமரர் ஊர்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாதது குறித்து தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகமும் அப்படித்தானா?
ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி வசதி இல்லையென்று இறந்தவர்களின் உடலை தாங்களே சுமந்து சென்ற அவலங்கள் பீஹார் மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறும். ஆனால் சுகாதாரத்துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்திலும் இதே நிலை தான் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது வேதாரண்யத்தை நடந்துள்ள சம்பவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *