திராவிட தலைவர்களை கொச்சைப்படுத்தும் ராஜா மீது புகார்!

ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் குறித்து தவறாக பேசினார், எழுதினார் என கவிஞர் வைரமுத்துவை பாஜக பொதுச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக தாக்கி பேசினார். அதோடு பிராமணர்களும் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தின் சில இடங்களில் வைரமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரை சேர்ந்த நகரமன்ற முன்னால் உறுப்பினரான வழக்கறிஞர் சீனுவாசன், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிறார், நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையிலும், மக்கள் பெரும் மதிப்பு கொண்ட திராவிட இயக்க தலைவர்கள், மறைந்த தலைவர்கள் பற்றி கண்டிக்க தக்க வகையில் பேசுகிறார். இவர் தான் இந்து மதத்துக்கே அத்தாரிட்டி போல் பேசுவது என்னைப்போன்ற இந்து மதத்தினரை கவலைக்கொள்ள செய்கிறது. இவரின் பேச்சு நாட்டில் மதக்கலவரம் வருமோ என அச்சப்பட வைக்கிறது. அதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதனை வாங்குவதா வேண்டாமா என காவல்நிலையத்தில் குழப்பம் வர, மேல்அதிகாரிகள் வாய்மொழியாக வாங்கிவைத்துக்கொள்ளுங்கள், வழக்கு எதுவும் போடாதீர்கள் என்றதால்,  புகார் தந்த வழக்கறிஞருக்கு இன்னும் சி.எஸ்.ஆர் கூட வழங்கவில்லை.
புகார் தந்த சீனுவாசன், திமுகவின் வழக்கறிஞர் பிரிவில் உள்ளதால் திமுக தலைமை தூண்டி விட்டு புகார் தந்துள்ளாரா?, தன்னிச்சையாக தந்துள்ளாரா என பாஜகவினர் உட்பட இந்துத்துவா அமைப்பினர் விசாரித்து வருகின்றனர்.
–    ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *