‘நான் சுதந்திரம்தான் கேட்டேன்.. இன்னமும் எனக்கு அது கிடைக்கவில்லை!’ – ஹதியா

நான் சுதந்திரம்தான் கேட்டேன்.. ஆனால், எனக்கு இன்னமும் அது கிடைக்கவேயில்லை என சேலம் கல்லூரிக்கு சென்ற ஹதியா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சேலம் ஹோமியோபதி கல்லூரிக்குச் சென்ற ஹதியா, அங்கு செய்தியாளர்களிடம், ‘நான் உச்சநீதிமன்றத்தில் சுதந்திரத்தைத் தான் கோரியிருந்தேன். என் கணவரைச் சந்திக்கும் சுதந்திரம் கேட்டேன். உண்மையில், இன்னமும் அது எனக்கு கிடைக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களாக எனக்குப் பிடிக்காத, என்னை மனமாற்றம் செய்யத் துடிக்கும் என் பெற்றோரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். எனக்கு டிவி பார்ப்பதற்கோ, மற்றவர்களோடு பேசுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டது. இதன் மூலமாக நான் சரியான மனநிலையில் இல்லை என அவர்கள் நிரூபிக்க நினைத்திருக்கிறார்கள். எனக்குப் பிடித்தவர்களை நான் சந்திக்க வேண்டும் அவ்வளவுதான். இதில் அரசியலோ, மதமோ இல்லை. எனக்கு செல்பேசி கொடுக்கப்படவில்லை. கடந்த பல நாட்களாக நான் யாரிடமும் பேச அனுமதிக்கப்படவில்லை. மற்ற குடிமகன்களுக்குக் கிடைக்கும் அடிப்படை உரிமையைத்தான் நான் எனக்கு வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்நிலையில், ஹதியாவிற்கு கார்டியனாக நியமிக்கப்பட்டிருக்கும் சேலம் கல்லூரியின் டீன் கண்ணன், நாங்கள் அவரை அகிலா என்றுதான் அழைப்போம். அவர் இங்கு படிக்கும் வரை இந்துதான். அவரது பெற்றோரைத் தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *