பொதக்குடியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி – மமக சாலை மறியல்

முஹம்மது ஜாவித்

கஜா புயலின் கோரதாண்டவத்திற்குப்பின் கடந்த 4 தினங்களாக மின்சாரம் இல்லாத சூழ்நிலையில், பொதக்குடி காதிரியா தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சுமார் 12 வயதுடைய சிறுவன் முஹம்மது ஜாவித் (த/பெ ஜெஹபர் சாதிக்) எதிர்பாராதவிதமாக அப்பகுதியின் வழியே செல்லும் HT மின்கம்பியில் கை பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

இச்சிறுவனின் இந்த விபத்து அப்பகுதி மக்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக கஜா புயல் நிவாரண பணியில் இரவு பகலாக முஹம்மது ஜாவித் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் குடும்பத்திற்கு பல்வேறு அமைப்புகளும், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று 20/11/2018 பிற்பகல் இச்சிறுவனின் உடல் அடக்கம் செய்ததற்குப்பின், மமக தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் இணைந்து, புயலுக்குப்பின் தடைபட்ட மின்சாரத்தை முன் அறிவிப்பின்றி கொடுத்ததற்காக மின்வாரியத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் பொருட்டு நஷ்டஈடு வழங்கக்கோரியும் திருவாரூர் மாவட்ட தமுமுக, மமக தலைவர் ஃபஜுலுல் ஹக் அவர்கள் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதி அமைச்சர் ஆர் காமராஜ் (தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சர்) அவர்களின் நேரடி வேண்டுகோளுக்கிணங்கவும், அவரே திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவருடன்  பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்தும் மறியல் வாபஸ் பெறப்பட்டது.

 

மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க ஆவண செய்வதாகவும், காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பொதக்குடியில் கூடுதல் கவனம் செலுத்தி நிவாரண பணிகளை முடுக்குவதாகவும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அனைத்து அரசு பணிகளும் குறிப்பாக மின்சார சம்பந்தப்பட்ட புனரமைப்பு வேலைகள் பொதக்குடியில் ஜரூராக நடந்து வருவது சாலை மறியலுக்கு கிடைத்த பலனாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *